ஒரு பெரிய ஓட்டல். அங்கே தங்குவதற்கு ஒருவன் வந்தான். ஓட்டலில் ஓர் அறை காலியாக இருந்தும் மேனேஜர் அவனுக்கு அந்த அறையைத் தர வெகுவாகத்தான் தயங்கினார். இவன் ஏன் அவ்வளவு தயக்கம் என்று கேட்டுவிட்டான்.
''அந்த அறைக்கு நேர் கீழே மிகப் பிரபலமான ஓர் அரசியல் தலைவர் தங்கியிருக்கிறார். ரொம்பப் பெரிய ஆள்தான். ஏகப்பட்ட செல்வாக்கு. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படறாரு. மேல் அறையில் யாராவது தங்கியிருந்து ஏதாவது சத்தம் செய்தால் என்ன நடக்குமோ என்று பயந்துதான் அதைப் போன மூன்று நாட்களாக காலியாக வைத்திருக்கிறேன். சின்னச் சத்தம் வந்தாலும் அவர் ஏக ரகளை பண்ணிவிடுகிறார்,'' என்று மேனேஜர் சொன்னார்.
வந்தவன், '' ஒண்ணும் பயந்துக்காதீங்க. நான் இருக்கப் போவது ஒரே ராத்திரிக்குத்தான். பகல் முழுக்க ஏகப்பட்ட வேலை. படுத்தா தூங்கிப் போவேன். அதுவும் நடுராத்திரிக்கு வந்துவிட்டு காலை ஐந்து மணிக்கே போய்விடுவேன். பன்னிரண்டு மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவில் என்ன நடக்கப் போகிறது. அதுவும் நான் நன்றாகத் தூங்கிவிடுவேன் என்கிறபோது? கனவுதான் காணப் போகிறேன். என் கனவுகள் அவரைத் தொந்திரவு செய்யப் போகின்றனவா?'' என்று சொன்னான்.
மேனேஜருக்கு சமாதானம் ஆகிவிட்டது. ''ஐந்து மணி நேரத்துக்குதான் தங்கப் போகிறான் என்றால் பிரச்சினை இருக்காதுதான்,'' என்று நினைத்துக் கொண்டார்.
இரவு பன்னிரண்டு மணிக்கு அவன் களைத்துப் போய் வந்தான். ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன. அந்த அரசியல் வாதியை மறந்தே போனான். தன் அறைக்குச் போய்ச் சேர்ந்தவுடன் படுக்கையில் உட்கார்ந்து ஒரு ஷூவைக் கழற்றி ஒரு மூலையில் வீசினான். அது தொம்மென்று விழந்தது. அந்தச் சத்தம் அவனுக்கு அரசியல்வாதியை நினைவுக்குக் கொண்டு வந்தது. எனவே அடுத்த ஷூவை மெதுவாகக் கீழே வைத்தான்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த அரசியல்வாதி இவன் அறைக் கதவைத் தட்டினான். தூக்கம் கலைந்து கதவைத் திறந்தான். ''என்னங்க? ஏதாவது செய்து விட்டேனா? ஒரு மணி நேரமாக நன்றாகத் தூங்கிக் கொண்டுதானே இருந்தேன்?'' என்றான்.
அரசியல்வாதிக்குக் கோபத்தில் முகம் சிவந்து விட்டது. '' ஆமாம். எங்கே அந்த இன்னொரு ஷூ? என்னால் தூங்கவே முடியவில்லை. என்ன ஆச்சு என்ற கேள்வி எனக்கெதிரில் தொங்கிக் கொண்டே நிற்கிறது. ஒரு ஷூவைப் போட்டுக் கொண்டே தூங்குகிறானா? என்ன ஆயிற்று? அதைப் பற்றிய நினைப்பை என்னால் ஒதுக்கவே முடியவில்லை. என்னதான் அதைப் பற்றி மறக்க முயற்சி செய்தாலும் அது என்னை விடுவதாயில்லை. தூங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உன்னையே வந்து என்ன செய்தாய் என்று கேட்டுவிடுவது. தெரியவில்லை என்றால் என்னால் தூங்கவே முடியாது,'' என்றார்.
சிக்மண்ட் ஃபிராய்டு இந்த மேலே உள்ள கதையை வழக்கமாக சொல்வதுண்டு.
ஒரு முட்டாள்தனமான எண்ணத்தை விட்டொழிப்பதே அவ்வளவு சிரமம். எந்த வகையிலும் உனக்குச் சம்பந்தமில்லாத எண்ணமே உன்னை அப்படி அலைக்கழிக்கிறது. உன்னைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டு சித்திரவதை செய்கிறது. உன்னைப் பைத்தியமாகக் கூட அடித்து விடுகிறது. - ஓஷோ
No comments:
Post a Comment