Osho Friends Kumbakonam: 2023

Saturday, July 8, 2023

கதிரவன் ஒரு உயிருள்ள பிராணி!


கதிரவன்(சூரியன்) ஓர் எரியும் நெருப்புக் கோளம் என்றுதான் பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது, எல்லையற்ற ஆற்றலும், துடிப்பும், வெறியும் மிக்க உயிருள்ள பிராணி! அது அடிக்கடி தன் மனநிலையை மாற்றிக் கொள்கிறது! சிறிதளவு அதன் மனநிலை மாறினாலும், பூமியின் உயிர்களை அது பாதிக்கிறது!

        கதிரவனில் எதுவும் ஏற்படாமல், பூமியில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. சூரிய கிரகணம் ஏற்பட்டால், கானகப் பறவைகள், இருபத்து நான்கு மணிநேரத்திற்கு முன்பே வாயடங்கிப் போய் விடுகின்றன! பூமி முழுவதுமே அமைதியாகி விடுகிறது. பறவைகள் பாடுவதை நிறுத்தி விடுகின்றன. பயம், சந்தேகம் ஆகியவற்றால் நடுநடுங்கி மெளனம் சாதிக்கின்றன.

        குரங்குகள் மரங்களை விட்டிறங்கித் தரைக்கு வந்து, கும்பலாய்ப் பாதுகாப்பாய் ஒன்றுகூடி அமரந்து விடுகின்றன. எப்போதும் சேட்டையும், கூச்சலுமாய்ப் பரபரப்பாய் இருக்கும் அவை, கிரகண காலத்தில் கடைப்பிடிக்கும் அமைதியைப்போல், தியானம் செய்பவர்களும் கடைப்பிடிக்க மாட்டார்கள்!

        சோதிடம் ஒரு புறக்கணிக்கப்பட்ட விஷயமாக இருந்து வருவதால், அந்தக் கருத்து மதிப்பு மிக்கதாக இதுவரை கருதப்படவில்லை. சோதிடம் மிகப் புராதனமானது. அதே சமயம் மிகவும் புறக்கணிக்கப்பட்டதும், மதிப்பு மிக்கதும் ஆகும். -ஓஷோ

ஓஷோ சன்னியாசிகளின் ஆடை நிறத்திற்கான காரணம் என்ன?

        

ஆரஞ்சு நிறம் வாழ்வை அடையாளப்படுத்துவது. இது இரத்தத்தின் நிறம். காலைக் கதிரவனின் அடையாளம். அதிகாலையில் கிழக்கு வானம் சிவக்கிறது. அது என் வாழ்வின் வலியுறுத்தல். ஆனால் நோக்கம் என்னவோ ஒன்றுதான்.

        நீங்கள் வாழ்வின் மீது தீவிர நேசம் கொள்ள வேண்டும் என்கிறேன் நான். அது உங்களுக்கு விழிப்புணர்வு தரும். வாழ வேண்டும் என்று தீவிர உணர்வு விழிப்புணர்வை உண்டாக்கிவிடும். 

        வாழ்க்கை ஒரு நினைப்பல்ல. மரணத்தைக் காட்டிலும் மனமற்று இருப்பதற்கு வாழ்வுதான் உதவும். வாழ்க்கை இங்கே இப்போது கைவசம் இருக்கிறது. மயானத்தைத் தேடிப் போக வேண்டியில்லை. - ஓஷோ.

Friday, July 7, 2023

ஓட்டல் அறை காலி இல்லை.

         ஒரு பெரிய ஓட்டல். அங்கே தங்குவதற்கு ஒருவன் வந்தான். ஓட்டலில் ஓர் அறை காலியாக இருந்தும் மேனேஜர் அவனுக்கு அந்த அறையைத் தர வெகுவாகத்தான்  தயங்கினார். இவன் ஏன் அவ்வளவு தயக்கம் என்று கேட்டுவிட்டான்.

        ''அந்த அறைக்கு நேர் கீழே மிகப் பிரபலமான ஓர் அரசியல் தலைவர் தங்கியிருக்கிறார். ரொம்பப் பெரிய ஆள்தான். ஏகப்பட்ட செல்வாக்கு.  சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படறாரு. மேல் அறையில் யாராவது தங்கியிருந்து ஏதாவது சத்தம் செய்தால் என்ன நடக்குமோ என்று பயந்துதான் அதைப் போன மூன்று நாட்களாக காலியாக வைத்திருக்கிறேன். சின்னச் சத்தம் வந்தாலும் அவர் ஏக ரகளை பண்ணிவிடுகிறார்,'' என்று மேனேஜர் சொன்னார்.

        வந்தவன், '' ஒண்ணும் பயந்துக்காதீங்க. நான் இருக்கப் போவது ஒரே ராத்திரிக்குத்தான். பகல் முழுக்க ஏகப்பட்ட வேலை. படுத்தா தூங்கிப் போவேன். அதுவும் நடுராத்திரிக்கு வந்துவிட்டு காலை ஐந்து மணிக்கே போய்விடுவேன். பன்னிரண்டு மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவில் என்ன நடக்கப் போகிறது. அதுவும் நான் நன்றாகத் தூங்கிவிடுவேன் என்கிறபோது? கனவுதான் காணப் போகிறேன். என் கனவுகள் அவரைத் தொந்திரவு செய்யப் போகின்றனவா?'' என்று சொன்னான்.

        மேனேஜருக்கு சமாதானம் ஆகிவிட்டது. ''ஐந்து மணி நேரத்துக்குதான் தங்கப் போகிறான் என்றால் பிரச்சினை இருக்காதுதான்,'' என்று நினைத்துக் கொண்டார்.

        இரவு பன்னிரண்டு மணிக்கு அவன் களைத்துப் போய் வந்தான். ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன. அந்த அரசியல் வாதியை மறந்தே போனான். தன் அறைக்குச் போய்ச் சேர்ந்தவுடன் படுக்கையில் உட்கார்ந்து ஒரு ஷூவைக் கழற்றி ஒரு மூலையில் வீசினான். அது தொம்மென்று விழந்தது. அந்தச் சத்தம் அவனுக்கு அரசியல்வாதியை நினைவுக்குக் கொண்டு வந்தது. எனவே அடுத்த ஷூவை மெதுவாகக் கீழே வைத்தான்.

        ஒரு மணி நேரம் கழித்து அந்த அரசியல்வாதி இவன் அறைக் கதவைத் தட்டினான். தூக்கம் கலைந்து கதவைத் திறந்தான். ''என்னங்க? ஏதாவது செய்து விட்டேனா? ஒரு மணி நேரமாக நன்றாகத் தூங்கிக் கொண்டுதானே இருந்தேன்?'' என்றான்.

        அரசியல்வாதிக்குக் கோபத்தில் முகம் சிவந்து விட்டது. '' ஆமாம். எங்கே அந்த இன்னொரு ஷூ? என்னால் தூங்கவே முடியவில்லை. என்ன ஆச்சு என்ற கேள்வி எனக்கெதிரில் தொங்கிக் கொண்டே நிற்கிறது. ஒரு ஷூவைப் போட்டுக் கொண்டே தூங்குகிறானா? என்ன ஆயிற்று? அதைப் பற்றிய நினைப்பை என்னால் ஒதுக்கவே முடியவில்லை. என்னதான் அதைப் பற்றி மறக்க முயற்சி செய்தாலும் அது என்னை விடுவதாயில்லை. தூங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உன்னையே வந்து என்ன செய்தாய் என்று கேட்டுவிடுவது. தெரியவில்லை என்றால் என்னால் தூங்கவே முடியாது,'' என்றார்.

சிக்மண்ட் ஃபிராய்டு இந்த மேலே உள்ள கதையை வழக்கமாக சொல்வதுண்டு.

        ஒரு முட்டாள்தனமான எண்ணத்தை விட்டொழிப்பதே அவ்வளவு சிரமம். எந்த வகையிலும் உனக்குச் சம்பந்தமில்லாத எண்ணமே உன்னை அப்படி அலைக்கழிக்கிறது. உன்னைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டு சித்திரவதை செய்கிறது. உன்னைப் பைத்தியமாகக் கூட அடித்து விடுகிறது. - ஓஷோ










Thursday, July 6, 2023

கெட்ட வார்த்தை ''ஷிட்''

 

        இரண்டு பாதிரியார்கள் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இளையவர் சுலபமாகப் பந்தைத் தட்டிக் குழிக்குள் விழச் செய்யும் முயற்சியில் தோற்றுப் போய், ''ஷிட், '' என்று சளைத்து கொண்டார்.

        வயதில் மூத்த இன்னொரு பாதிரியார் அப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்தினால் கடவுள் உன்னை இடி கொண்டு தாக்கித் தண்டிப்பார் என்றார். விளையாடிக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு பந்தைத் தவறவிட்ட இளையவர் மீண்டும், ''ஷிட்,'' என்கிறார்.

        திடீரென வானம் பிளந்து கொண்டது. மின்னல் வெடித்துக் கிளம்பி மூத்த பாதிரியாரை அடித்துக் கொன்றது. சற்று மெளனம். பிறகு கடவுளின் குரலில் ஒரு முணுமுணுப்பு: ''ஷிட்!''


உன்னிடமிருந்து உன் கடவுளர் வேறுபட்டவராக இருக்க முடியாது. யார் அவர்களைப் படைப்பது? அவர்களுக்கு வடிவமும் வனப்பும் நிறமும் தருவது யார்? மனிதன்தானே?  மனிதனே கடவுளரைப் படைக்கிறான். சிலைகளாக வடிக்கிறான். தன்னைப் போலக் கண்களோடு மூக்கோடு - மனத்தோடும் தான்.-ஓஷோ



Wednesday, July 5, 2023

விபச்சார விடுதியின் கிளி

      

பெண்ணொருத்தி விபச்சார விடுதியில் இருந்த ஒரு கிளியை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்தாள். விடுதியில் கற்றுக் கொடுத்த அசிங்கமான வார்த்தைகளைக கிளி மறக்க வேண்டும் என்று ஒரிரு நாட்கள் அதன் கூண்டைக் துணி போட்டு மூடி வைத்திருந்தாள். 

        துணியை எடுத்தபின் அவளைக் கண்டு, ''புதிய வீடு. புதிய மேடம்'' என்றது. அவளுடைய மகள் அங்கே வந்தபோது கிறீச்சீட்டு, '' புதிய பெண்கள்.'' என்றது.

        அன்றிரவு அவள் கணவன் வீடு வந்து சேர்ந்தான். கிளி கிறீச் கிறீச் என்று கத்தியது. '' அதே வாடிக்கையாளர்கள். ஹல்லோ ஜோ'' என்றதாம்.


ஒரு பெண்ணின் உடலை இடித்துக் கொண்டு நிற்கும் வாய்ப்பு உனக்குக் கிடைக்குமேயானால் அதை நீ தவறவிடுவதில்லை. ஓர் உடலின் மீது தேய்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு அருவருப்பான விஷயம். ஏதோ ஒரு விஷயம் உன்னுள் நிறைவேறாமல் தங்கி விட்டது. ஒரு வயதானவன் காமக் கண்களுடன் வெறியோடு பார்ப்பதைவிட இந்த உலகத்திலேயே அசிங்கமான விஷயம் வேறொன்றுமில்லை. இப்போது அவனுடையக் கண்கள் அப்பாவித்தனமாக இருக்க வேண்டும். இப்போது எல்லாவற்றையும் அவன் முடித்துக் கொண்டிருக்க வேண்டும். பாலுணர்வு என்பது ஏதோ ஓர் அருவருப்பான ஒரு விஷயம் என்பதல்ல. நினைவு வைத்துக் கொள். உரிய நேரத்தில் உரிய பருவத்தில் இருக்கும்போது பாலுணர்வு அழகானதாக விளங்குகிறது. பருவம் கடந்து, காலம் கடந்து அது காணப் பட்டால் அருவருப்பாகத் தான் காட்சியளிக்கும். -ஓஷோ.

Tuesday, July 4, 2023

பிக்னிக் சென்ற மூன்று குடிகாரர்கள்

       

மூன்று குடிகாரர்கள் ஒரு தெரு வழியே போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் ஒரு ரொட்டித் துண்டு. மற்றவன் கையில் ஒரு மதுப்புட்டி. இன்னொருவன் கையில் ஒரு காரின் கதவு. போலீஸ்காரர் ஒருவர் அவர்களை நிறுத்தி, ''எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

        ரொட்டித் துண்டுக்காரன், ''பிக்னிக். ''என்றான்.

    போலீஸ்காரர், ''பிக்னிக்கா? சரிதான். பசிக்கு ரொட்டி. தாகத்துக்கு மது. கார்க்கதவு எதற்கு? புரியவில்லையே!'' என்றார்.

    மூன்றாமவன், ''அதுவா? குளிரடித்தால் கண்ணாடியை ஏற்றிவிடுவதற்கு,'' என்றான்.

    குடிபோதையின் பல நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

    மக்கள் சோம்பேறிகள். சோம்பேறித்தனம் தூக்கத்தின் ஒரு பகுதி. எனவே விடாமுயற்சியும் முனைப்பும் இடைவிடாச் செயலும் தேவையாகின்றன. அளவு தெரியாமல் குடித்துவிட்டவன் விழுந்து விழுந்து எழுவதைப் போலத்தான். எனவே குப்புற விழுவதை மன்னித்து விடலாம்.

        ஆனால் தெளிவு பிறக்கும் அந்தக் கணத்தில், ஒளிக்கீற்று ஒன்று பாயும் கணத்தில், நினைப்பு திரும்பிய அந்தக் கணத்தில் உன் சக்தியையெல்லாம் ஒரு முனைப்படுத்தி, அதற்குள் பாய விடு. மூடனாக இருந்துவிடாதே. தூங்கிக் கொண்டே இருத்துவிடாதே. குடிகாரனாகவே இருந்துவிடாதே. - ஓஷோ


Monday, July 3, 2023

ஏன் காமம் எனக்கு அலுத்துப் போய்விட்டது?

          

 
    ஒரு புதுமணத் தம்பதியினர் நயாகரா நீர்வீழ்ச்சிக்குத் தேன்நிலவுக்குப் போகிறார்கள். போய்ச் சேர்ந்தவுடன் ஓர் ஓட்டலில் அறை எடுக்கிறார்கள். உள்ளே போனவர்கள் மூன்று நாளைக்கு இருக்கிறார்களா என்பதே தெரிய வில்லை. ரூம் சர்வீஸ்க்குக் கூட யாரையும் கூப்பிடவில்லை. மேனேஜருக்குக் கவலையாகிவிட்டது. எனவே கதவைத் தட்டிப் பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார். கதவை தட்டுகிறார். உள்ளே சலசலப்புக் கேட்கிறது. ஒருவர் நடந்து வருவது தெரிகிறது. இளைத்துக் களைத்துப் போன இளைஞன் கதவைத் திறக்கிறான். '' எங்களுக்குக் கவலையாக இருந்தது.'' என்று சொன்னார் மேனேஜர்.

'' சரிதான். இப்போதுதான் எங்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது,'' என்றான் அவன்.

 '' புரிகிறது. ''என்றாலும் உலகத்தின் மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று பக்கத்திலே இருக்கிறதே,'' என்றார் அவர்.

        உள்ளிருந்து உடனே ஒரு குரல் பலவீனமாகக் கேட்டது. '' அதை இன்னுமொரு முறை எனக்குக் காட்டினால் இந்த ஜன்னல் வழியாக எட்டிக் குதித்து விடுவேன்.''

புரிந்ததா? மூன்று நாட்கள் தொடர்ச்சியாக...அந்தப் பெண் எட்டிக் குதித்து விடுவாள்தான்.

மனிதன் ஓரளவுக்குத்தான் முட்டாள்தனமாக வாழலாம். சில எல்லைகளைத் தாண்டியதும் தனக்குத் தானே என்ன செய்து கொள்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டாக வேண்டும்.

    காமத்தை விட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காமம் மட்டுமே எல்லாமுமில்லை. அது முக்கியமானதுதான். ஆனால் அதுவே எல்லாமும்மல்ல. அதில் மாட்டிக் கொண்டிருந்துவிட்டாய் என்றால் வேறு மிக முக்கியமான பலவற்றை இழந்து விடுவாய். - ஓஷோ (தம்மபதம் எனும் நூலிருந்து)


Sunday, July 2, 2023

அம்மா! நான் விபச்சாரி ஆகி விட்டேன்!


ஓர் அழகான இளம்பெண் இலண்டனிலிருந்து வீடு வந்து சேர்ந்தாள். அவள் ஒரு சிறு கிராமத்துக் கத்தோலிக்கக் குடும்பத்துப் பெண். நான்கைந்து வருடம் இலண்டனில் இருந்து பெரும் பணக்காரியாகிருந்தாள். பெற்றோரைப் பார்க்க வந்திருந்தாள். அம்மாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
        
        '' எப்படி இவ்வளவு பெரிய பணக்காரியானாய்? அடாடா, என்ன உடுப்பு, வைர மோதிரம், அழகான கார்!'' என்று வியந்தாள்.

        அவளோ, ''அம்மா, நான் ஒரு ப்ராஸ்டிட்யூட் ஆகிவிட்டேன்,'' என்றாள்.

        கேட்டவுடனே அம்மா மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்தவுடன், '' என்ன சொன்னாய்?'' என்று கேட்டாள்.

        மகள், '' அம்மா, நான் ஒரு ப்ராஸ்டிட்யூட் ஆகி விட்டேன்,'' என்றாள்.

        '' அடாடா, ஒரு ப்ரோடஸ்டண்ட் என்றல்லவா என் காதில் விழந்தது,'' என்றாள்.

    ************************************************************************

        அனைவருக்கும் ஒரே மதம் என்ற முட்டாள்தனமெல்லாம் போதும், போதும். ஒரே மதம் என்றால் சச்சரவுகள் இருக்காது என்று அப்படிப்பட்ட உலக மதத்தை ஸ்தாபிக்க முன்னாளில் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது காரிய சாத்தியமே இல்லை. அப்படியே ஒரு மதத்தை உலகம் பூராவும் கொண்டு வந்து விட்டாலும் அதிலும் புரோடஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள் என்று பல கிளைகள் தோன்றித் துளிர்விட்டுத் தழைத்துவிடும். பிறகென்ன? பழைய குருடி கதவைத் திறந்த கதைதான். மறுபடியும் சச்சரவுகள். காரணம்? ஒவ்வொருவரது தேவைகளும் புரிதல்களும் பிறருடையதிடமிருந்து வேறுபட்டிருப்பதுதான். - ஓஷோ

Friday, June 30, 2023

சத்தியத்தை தேடும் உரிமை


யாராக இருந்தாலும்  இளமையிலிருந்து ஏதாவது ஒரு மதம் அல்லது ஒரு தத்துவம் அல்லது ஒரு வேதாந்த சாஸ்திரம் இவைகளை கடைப்பிடிக்கும்படி கட்டுப்படுத்தப்படக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு செய்வதால் அவனது சத்தியத்தைத் தேடும் சுதந்திரத்தை அழித்து விடுகிறீர்கள். அவன் போதுமான பலம்பெற உதவுங்கள். அவன் சந்தேகப்படவும் அவனைச் சுற்றியுள்ள தொன்றுதொட்ட நம்பிக்கைகள் உதறவும் ஊக்கப்படுத்துங்கள். நம்பிக்கைகளை பற்றி எதையும் அவன் வெறுமனே நம்புவதற்கு ஒரு போதும் விட்டுவிடாதீர்கள். அவன் அவற்றை அறிவுபூர்வமாக அறிந்து கொள்ள உதவுங்கள். அத்தகைய தேடுதலில் என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு காலமானாலும் சரி, அவனே தனியாக அவனது புனித யாத்திரையை மேற்கொள்ளட்டும். எனென்றால் சத்தியத்தை அறிந்து கொள்ள வேறு வழியே கிடையாது. 

       தங்களை கிறிஸ்தவர்கள் என்றும் யூதர்கள் என்றும், இந்துக் நம்பிக்கைகளை பற்றி எதையும் அவன் வெறுமனே நம்புவதற்கு ஒரு போதும் விட்டுவிடாதீர்கள். கள் என்றும், முகமதியர்கள் என்றும் எண்ணிக் கொண்டுள்ள இவர்கள் எல்லோரும் வெறும் நம்பிக்கைவாதிகள்தான்; அவர்கள் எதையும் அறியமாட்டார்கள். -ஓஷோ

Wednesday, June 28, 2023

விண்மீன் அதிர்வுகளால் உடல் நலம் பாதிக்குமா?


        புத்தம் புதிதாகப் பிறக்கும் குழந்தையின் புத்தம் புதிய மனதில், அந்த வேளையில் இயங்கும் ஒரு விண்மீன் அதிர்வு அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் அதனுடைய உடல்நலமும், சீர்கேடும், அந்த வீண்மீனின் அதிர்வுகளால்தான் உண்டாகிறது.

            நீங்கள் பிறக்கும்போது, உள்ள விண்மீனின் அதிர்வுடன் உங்களுக்கு ஒத்திசைவு ஏற்பட்டால், நீங்கள் உடல் நலத்தோடு வாழ்வீர்கள். உங்கள் ஒத்திசைவு பிளவுபட்டால், உடல்நலம் கெடும்.

            இந்த துறையில் பராசெல்சஸ் செய்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு நோயாளியின் ஜாதகக் குறிப்பைப் பார்க்காமல், அவர் மருந்து கொடுக்கவில்லை. அதில், நோய் குணமானது கண்டு மற்ற மருத்துவர்கள் குழப்பமடைந்தார்கள். ஏனென்றால், அந்த நோயாளிகள் மற்ற மருத்துவர்களால் முடியாது என்று கைவிடப்பட்டவர்கள்.

            ''ஒருவரது 'ஜன்ம நட்சத்திரம்' இன்னதென்று தெரியாமல், அவரது உடலின் உள் ஒத்திசைவை அறிய முடியாது. அது தெரியாமல், ஒருவரைக் குணப்படுத்துவது எப்படி?'' என்று அவர் கூறுவது வழக்கம். -ஓஷோ

            


        


            

பின் தொடரும் துன்பங்கள் ஏன்?

 


துன்பம் என்பது மனம் உற்பத்தி செய்பவற்றின் கிளை. மனதின் நிழல். துன்பம் ஒரு பேய்க்கனவு. தூங்கும்போதுதான் துயரம் வருகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் வரை தப்பிக்க மார்க்கமில்லை. அது வடிவங்களை மாற்றி கொள்ளும். அது இலட்சக்கணக்கான வடிங்கள் எடுக்கும் என்றாலும், அது இருந்து கொண்டேதானிருக்கும்.

    துன்பம் ஒரு மனநிழல். மனம் என்றால் உறக்கம். மனம் என்றால் பிரக்ஞை இழப்பு. மனம் என்றால் விழிப்பின்மை. மனம் என்றால் நீங்கள் யார் என்பது அறியாமை என்றாலும், அறிந்ததாகக் காட்டி கொள்ளும்.

        மனம் என்றால் நீங்கள் யார் என்பதை அறியாததோடு குறிக்கோள் இருப்பதாகவும் நடிப்பது. வாழ்க்கை என்றால் என்னவென்று அறிந்தது போலக் காட்டிக் கொள்வது. ஆனால் வாழ்க்கையின் அர்த்தமே புரியாதிருப்பது. எனினும் புரிந்துவிட்டது போல நம்ம வைப்பது.

        சக்கரம் எருதைப் பின்பற்றிச் செல்லவது போல, மனம் நிச்சயம் துயரத்தையே கொண்டு வரும். -ஓஷோ

தம்மபதத்தின் முழு இரகசியம்

      நீங்கள் யார் என்பதை உண்மையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சிந்தனையை நிறுத்தி மனமற்றுப் போவது எவ்வாறு என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் தியானம்.

            தியானம் என்பது மனம் கடந்து செல்வது. மனதைக் கழற்றிவிட்டு மனமிலா வெளியில் பிரவேசிப்பது. மனமற்ற நிலையில்தான் இறுதி உண்மையான தம்மம் விளங்கும்.

            மனதிலிருந்து மனமற்ற நிலைக்குப் போவதே காலடி வைப்பு. அதுதான் பாதம், பதம். தம்மபதத்தின் முழு இரகசியமும் இதுதான். - ஓஷோ.